பொங்கல் பண்டிகை

ஆலம்பள்ளம் கிராமம் – பொங்கல் பண்டிகை

விவசாயம் ஒன்றே உயிர் மூச்செனக்கருதி வாழும் எங்களுக்கு தை பிறந்தால் எப்போதுமே வழி பிறக்கும். அதற்க்கு மூல காரணமாக விளங்கும் சூரிய பகவான், எருது மற்றும் பசு ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலே பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறோம். பொங்கல் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் மார்கழி கடைசி நாள் தொடங்கி தை மூன்றாம் நாள் வரை முறையே போகி, சூரியப் பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என கொண்டாடுகிறோம்.

போகி பண்டிகை

பழையன கழிதலும் புதியன புகுதலும் இப்பண்டிகையின் சிறப்பு.

முசிறியை ஆதாரமாகக் கொண்டு விளங்கும் முப்பத்திரண்டு கிராமங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் உடன் பிறந்த சகோதரிகளுக்கு குங்குமம், பூ, மஞ்சள், வெற்றிலை, பாக்கு, பொங்கல் பானை, வாழை தார், கரும்பு, மற்றும் உணவுப் பொருட்கள் பொங்கல் வரிசையாக இந்நாளிலே கொடுக்கப்படும். வரிசை கொடுக்கச் செல்லும் மாட்டு வண்டி சத்தமும், மாட்டின் கழுத்திலே பூட்டப்பட்ட மணியின் சத்தமும் விண்ணை எட்டும்.

சூரியப் பொங்கல் / பெரும் பொங்கல்

ஆண்கள் செம்மண் குழைத்து, பொங்கலுக்கான அடுப்பு மற்றும் திட்டாணியை வாசலிலே போடுவர். பெண்கள் அதி காலை விழித்தெழுந்து, நீராடி, வீட்டை சுத்தம் செய்து புதிதாக போடப்பட்ட அடுப்பிலே அழகுற மாவுக்கோலமிட்டு, பூச்சூட்டி, மஞ்சள் பொட்டு வைத்து , புதிய மண் பானை, அந்த அறுவடையில் தயார் செய்யப்பட அரிசி முதலான பொருட்களை தயார் செய்வர்.

குப்பு அய்யர் (ராமச்சந்திரன் சிவாச்சாரியார்) குறித்த நன்னேரத்தில் பொங்கல் செய்து சூரிய பகவானை வழிபட தண்டோரா போடப்படும். அவ்வாறே அனைவரும் புதுப் பானையில் பொங்கல் வைத்து, கரும்பு, வாழைப்பழம், வெல்லம், வெற்றிலை, பாக்கு முதலான பொருட்களுடன் தேங்காய் உடைத்து சூரிய பகவானை வழிபடுவோம்.

ஒவ்வொரு வீட்டிலுள்ள வயது முதிர்ந்த ஆணும், அதிகாலை எழுந்து அந்த வருடம் எவரெவர் வீடுகளில் உயிர் இழப்பின் காரணமாக பொங்கல் கொண்டாட முடியாத நிலையில் உள்ளனரோ அவரவர் வீடுகளுக்குச் சென்று ஆறுதல் கூறி வருவர்.

மாட்டுப்பொங்கல்

நன்றி மறப்பது நன்றன்று என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க, எங்களுக்கு விவசாயத்திலே உதவி செய்த எருது மற்றும் பசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவற்றை குளிப்பாட்டி, கொம்பில் வண்ணம் பூசி, ஆவாரன்கொத்து, பெரண்டை, கன்னுப்பூ, மாவிலை, வேப்பம் இலை போன்றவற்றால் தொடுத்த மாலை அணிவித்து, நல்ல உணவு கொடுக்கப்படும்

பஞ்சாயத்து தலைவரின் தலைமையில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பச்சை அரிசி வசூலிக்கப்பட்டு மாலையில் ஆக்ராஹாரதிலே பொங்கல் வைத்து பல்லயம் போடப்படும். பாரம்பரிய முறைப்படி அன்றிரவு ஊரிலுள்ள அனைத்து குடியானவர்களின் வீட்டிலுள்ள எருது, பசுக்கள் ஆக்ராஹாரம் கொண்டு வரப்பட்டு ஒவ்வொருவருக்கும் பொங்கல், வெல்லம், வழங்கப்படும். இளம் காளையர்கள் ஆக்ராஹாரத்தை மூன்று சுற்றுகள் சுற்றி வர ஒவ்வொரு சுற்றுக்கும் முறையே தண்ணீர், எண்ணெய் மற்றும் சீகர்க்காய் எருது, பசுக்களுக்கு கொடுக்கப்பட்டு, மாடுகள் திரும்ப வீட்டிற்க்கு ஓட்டமாக ஒட்டிச் செல்ல்வதைக் காண கண் கோடி வேண்டும்.

மாடுகள் வீட்டிற்க்கு நுழைவதற்கு முன் ஓரல், உலக்கை ஆகியவற்றைக்கொண்டு தீ மூட்டி, சில சம்பிரதாய சடங்குகளும் நடைபெறும். பின் மாடுகளுக்கு பொங்கலிட்டு, உணவு கொடுக்கப்படும்.

காணும் பொங்கல் / கண்ணுப் பொங்கல்

எங்கள் ஊரில் காணும் பொங்கலன்று அனைத்து வயதினருக்கும் விளையாட்டுப்போட்டிகள் நடைபெறும். இவ்விளையாட்டுப் போட்டிகளின் மூலம் ஊதியம் ஈட்ட வெளியூர் மற்றும் வெளி நாடுகளுக்குச் சென்று திரும்பி வந்துள்ள அனைவரையும் காண முடியும். ஒரு விதத்தில் இந்த விளையாட்டுப் போட்டிகளின் மூலம் சக ஊர் வாசிகளை கண்டு கருத்துக்களை பரிமாறிக்கொள்ள நல்ல வாய்ப்பு கிடைக்கிறது.

மட்டுப்போங்களன்று இளம் காளையர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று நிதி வசூல் செய்து அன்றிரவு மாட்டுப்பொங்கல் முடிந்து காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகளுக்கான பரிசுப் பொருள்களை வாங்கி வருவர். இவ்விளையாட்டுப் போட்டிகள் முக்கியமாக வேடிக்கை நிறைந்ததாக இருக்கும். சில விளையாட்டுப் போட்டிகள் உதாரணத்திற்க்கு… சிறுவர்களுக்கான தவளை ஓட்டம், சாக்கு ஓட்டம், மூன்று கால் ஓட்டம், பெரியவர்களுக்கான அதிர்ஷ்ட நாற்காலி, கயிறு இழுத்தல் (இதில் பயன்படுத்தப்படும் கயிறு எந்த வருடமும் அருவாமல் இருந்ததே இல்லை), பானை உடைத்தல் (பல பேரோட மண்டை உடையாமல் இருந்தால் நல்லது), சுவற்றில் வரையப்பட்ட வால் இல்லா கழுதைக்கு வால் வரைவது.

அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் மாலை வரை மட்டுமே. அன்றிரவே வினாடி வினா, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி, குறள் ஒப்புவித்தல், நடனப் போட்டி மற்றும் மாறு வேடப் போட்டி ஆகியவற்றைத் தொடர்ந்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பரிசளிப்பு விழா நடைபெறும்.

Courtesy: www.alampallam.com

No Comments